Thursday, March 18, 2010
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் ஊடகவியலாளாகளுக்கு ஈ-மெயில் ஊடாக அச்சுறுத்தல்!
தமிழ்தேசிய கூட்டமைப்புக்கெதிரான பிரச்சாரத்தை உடன் நிறுத்துங்கள்
இலங்கை அரசின் சதித்திட்டத்திற்கு துணைபோகாதீர்கள்
தனிநபர்களின் விருப்புவெறுப்புகளுக்கு இடமளியாமல்
தமிழ்மக்களின் பொதுநலனில் கவனம் செலுத்துங்கள்
அழிந்தது இழந்தது போதும். இனியும் இடமளிக்க வேண்டாம்
என்ற மொட்டைக் கடிதப் பாணியிலான எச்சரிக்கை டென்மார்க்கிலிருந்து குகன் தம்பிப்பிள்ளை எனபவரால் தயாரிக்கப்பட்டு, சுவிசிலிருந்து துரைரட்ணம் இராமசாமி என்பவரால் தமிழ்த் தேசிய சார்பு ஊடகங்களுக்கு மின் அஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டு வருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக இவர்கள் மேற்கொண்டுவரும் எச்சரிக்கை அச்சுறுத்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்களை இலங்கை அரசின் சதித் திட்டத்திற்குத் துணை போபவர்களாகச் சித்தரிக்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் கூட்டமைப்பின் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான நிலை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு திருப்திகரமான எந்தப் பதிகல்ளையும் கொடுக்காமல், ஒற்றுமை என்ற பெயரில் எங்களை ஒட்டுமொத்தமாக சிங்கள நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள் கூட்டமைப்பினர் கூட்டங்கள் போட்டுக் கூறித் திரிவதும், அதற்காக அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தல் விடுப்பதும் அரசியல் சார்ந்த, ஊடகம் சார்ந்த தர்மமாக இருக்காது என்பதே எனது தாழ்மையான கருத்து.
ஒற்றுமையாக முன்பு ஒரு காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் சிங்கள நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த அனுபவம் ஈழத் தமிழர்களுக்கு இருக்கிறது. தமிழீழ ஆணையுடன் கூட்டமாக சிங்கள நாடாளுமன்றம் சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணி எதையெல்லாம் தமக்காகப் பெற்றுக் கொண்டது, அந்தத் தமிழாகளுக்கு எதைப் பெற்றுக் கொடுத்தது என்பதைத் தமிழ் மக்கள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான், கூட்டமைப்பு தன் சுயத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியத்தினுள் தள்ளப்பட்டுள்ளது.
எல்லோரும் ஒன்றாகப் போவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உவப்பானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. அதில் தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கும், அதற்கான கால எல்லை எது? அது முடியாவிட்டால், செய்யக் கூடிய பரிகாரம் என்ன? என்பதெல்லாம் தமிழ் மக்களுக்குத் தெரிந்தே ஆக வேண்டும் என்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்களது விருப்பம் யாராலும் நிராகரிக்கப்பட முடியாதது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்து கொள்ள வேண்டும்.
மிதவாதத் தமிழ்த் தலைமைகளின் முப்பதாண்டு கால தகிடுதத்தங்களும், வாய் வீரமும்தான் தமிழீழ மக்களை இந்தியக் கரங்களில் சேர்த்து முள்ளிவாய்க்காலில் அழிய வைத்தது என்பதை யாராலும் நிராகரிக்க முடியாது. அதே போன்றே சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு மீண்டும் தமிழீழ மக்களை இந்தியக் கொடுங் கரங்களில் சிக்க வைப்பதற்கு நாங்கள் உடந்தையாவதற்கும் நாங்கள் தயாராக இல்லை.
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் கிடைத்த வெற்றிடத்தைப் பயன்படுத்தி தமிழ்த் தேசியத் தலைமையைக் கைப்பற்ற ஓடித் திரிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த மக்களுக்காகப் போராடிய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைப் புறக்கணித்ததன் காரணத்தை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்தியா அதை விரும்பவில்லை. அதற்கு அனுமதிக்கவில்லை. இந்தியாவின் கட்டளைப்படியே கூட்டமைப்பில் எஞ்சியிருந்த தமிழ்த் தேசிய உணர்வாளர்களான கஜேந்திரன், பத்மினி, கஜேந்திரகுமார் ஆகியோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தியாவில் அலுவலகம் அமைத்தபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யப் போகின்றது என்பது எமக்கு நன்றாகவே புரிந்துவிட்டது.
இந்தியாவால் ஈழத் தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது. இந்தியாவிடமிருந்துதான் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும். ஆகையால், மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் பேரழிவு ஏற்படாமல் ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டுமானால், அவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து காப்பாற்ற வேண்டியது தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் எம்மைப் போன்ற ஒவ்வொருவரது கடமையாகவே உள்ளது.
இந்தியா எங்களிடம் வந்தபோது நாங்கள் இழந்தது கொஞ்சமாக இருந்தது.
இப்போது எங்களிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை, ஆனாலும்
இந்தியா வருகின்றது... ஏனென்றால் எங்களிடம் இன்னமும் உயிர்கள் மிச்சமிருக்கின்றது
சிங்கள தேசத்தை மிரட்டுவதற்கு எங்கள் இரத்தம் இன்னமும் அதற்குத் தேவைப்படுகின்றது!
நாங்கள் அழிந்தது போதும்! இந்தியாவிடம் எங்களை அடகு வைப்பதை நிறுத்திவிடுங்கள்!
~~~~~~~~~~~~~~~~~~~~
மேற்கண்ட கட்டுரை ஈழநாடு - பாலச்சந்திரன் அவர்களிடமிருந்து வந்திருந்தது. இங்கு பிரசுரிக்கப்படுகிறது. Defeatsms.com என்ற எமது தளத்தை முறைப்பாடு செய்து முடக்கியவர்கள் மேற்படி கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி எச்சரிக்கை மின்னஞ்சலை அனுப்பியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
Wednesday, March 17, 2010
திருமலையில் சம்பந்தர் மட்டும் தான் தமிழரா?
தமிழர் தாயகத்தில் நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலிலே திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் எல்லோரினதும் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி போட்டியிடும் இரு மாவட்டங்களில் திருகோணமலையும் ஒன்று.
இந்நிலையில் தமிழ்மக்களிடத்தில் – குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர், ஆய்வாளரிடத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது திருகோணமலை தேர்தல் மாவட்டம். காரணம், அங்கு தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமற் போகப்போகிறது என்ற ஒரு வாதம்.
கடந்தமுறை மூவாயிரத்துச் சொச்ச வாக்குகளால் ஓர் ஆசனத்தை அதிகமாகப் பெற்றுக்கொண்டது தமிழர் தரப்பு. இந்தமுறை என்னதான் ‘ஒற்றுமை’ப் பூச்சாண்டி காட்டிப் போட்டியிட்டாலும் ஓர் ஆசனம் மட்டுமே தமிழர் தரப்புக்குக் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதிருந்த அதே வாக்காளர் தொகைதான் தமிழர்தரப்பில் இருப்பதும், ஏனைய சமூகங்களில் – குறிப்பாக முஸ்லீம் சமூகத்தின் வாக்காளர் எண்ணிக்கை கணிசமானளவில் உயர்ந்திருப்பதும் இதற்கு முதன்மைக் காரணங்கள். இரண்டாம் பட்சக் காரணங்களாக, பிள்ளையானாலும் ஏனைய சுயேட்சைக் குழுக்களாலும் பிரியப் போகும் தமிழ்வாக்குகள். எப்படித் தான் கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் சைக்கிள் சின்னக்காரர் போட்டியிலிருந்து விலகுவதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைக்கப்போவது அதிகபட்சம் ஓர் ஆசனம் மட்டுமே. அதற்குமேல் பெறவேண்டுமென்றால் மிகப்பெருந்தொகையில் கள்ளவாக்குப் போட்டால்தான் உண்டு.
ஆக, திருமலையில் தமிழர் தரப்புக்கு ஓர் ஆசனம் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது என்ற நிலையைக் கருத்திற்கொண்டு மேற்கொண்டு நகரலாம். இப்போது திருமலை தொடர்பாக எழுதும் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் சொல்லும் ஒரு விடயம், ‘அங்கு தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும்; எனவே கஜேந்திரகுமாரின் அணி தேர்தலிலிருந்து ஒதுங்க வேண்டும்’. திருமலையில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டுமென்பது சரிதான். அதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. தமிழர் பால் அக்கறை கொண்ட யாருக்குத்தான் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்படுவது விருப்புக்குரிய காரியமாய் இருக்கக் கூடும்? இங்கே நாம் முரண்படும் விடயமென்னவென்றால், சம்பந்தர் ஐயா வெல்லவேண்டுமென்பதும் கஜேந்திரகுமார் அணி விலக வேண்டுமென்பதும் தான்.
திருமலையிலிருந்து நாடாளுமன்றம் போகும் தமிழன் கட்டாயம் சம்பந்தராகத்தான் இருக்கவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு இந்த எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள் முரண்டு பிடிப்பது ஏனென்றுதான் விளங்கவில்லை. இத்தனைக்கும் இவர்களில் பலர் சம்பந்தன் தவறான பாதையிற் செல்கிறார் என்ற விளக்கத்துடன்தான் இருக்கிறார்கள் என்பது ஒரு நகைமுரண். ஆனாலும் திருமலையில் வெல்லும் தமிழன் சம்பந்தராகத்தான் இருக்க வேண்டுமென்று மனப்பாடம் செய்துவைத்துக் கொண்டு செயலாற்றுகிறார்கள்.
சம்பந்தர் உட்பட்ட SMS அணி தவறான பாதையிற் செல்கிறது; உப்புச்சப்பற்ற ஒரு தீர்வுத்திட்டத்தை நோக்கி இவர்கள் நகர்த்தப்படுகிறார்கள்; தமிழ்மக்களின் போராட்டத்தின் நியாயத்தை, தியாகத்தை அர்த்தமற்றதாக்கும் சதிவலையில் தமிழினத்தைச் சிக்கவைக்கும் சதிகாரர்களின் கைப்பிள்ளையாக இவர்கள் நடந்துகொள்கிறார்கள் என்ற விமர்சனங்களை, குற்றச்சாட்டுக்களை இப்போது யாருக்கும் விளங்கப்படுத்திக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. இந்த அணியின் முகமூடியைக் கிழித்த அண்மைய நிகழ்வுதான் நிருபமா ராவுடனான இவர்களின் சந்திப்பு.
இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ரெலோ அமைப்பும் செல்வம் அடைக்கலநாதனும் இருக்கும் நிலையில், நிருபமாவுடனான சந்திப்புக்கு அவரைக் கடாத்திவிட்டு SMS அணிமட்டும் சென்று குசுகுசுத்துவிட்டு வந்துள்ளது. ஏன் செல்வம் அடைக்கலநாதன் அழைத்துச் செல்லப்படவில்லை என்ற கேள்விக்கான விடை மிகத் தெளிவானது. இந்த மூவரைக் கொண்ட அணி மிகப்பெரும் சதிநாடகத்தில் ஓரங்கமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நாம் நம்புவது தவறன்று என்பதை அவர்களே நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று யாழ் மாவட்டத்திலே SMS அணியிலுள்ள இருவராலும் வாரி இறைக்கப்படும் பணம் எப்படி வந்ததென்று நாம் யோசித்தால் நிறைய விடயங்கள் புலப்படும் (கனடாவின் தானைத்தலைவன் தங்கவேலான் திரட்டிக் கொடுத்த பணமன்று).
இந்த SMS அணியின் ஓரங்கம்தான் இந்த சம்பந்தன் ஐயா. இவரையும் தோற்கடிப்பதன் ஊடாகத்தான் தமிழரின் அரசியல் உரிமைக்கான போராட்ட முன்னெடுப்புக்களைத் தொடர முடியும். எமது போராட்டத்தை ஒழிக்கவென இரண்டு கட்டமாகச் செயலாற்றிய இந்தியா முதற்கட்டத்தில் மே 19 உடன் வெற்றிபெற்றுவிட்டது. இப்போது இரண்டாம் கட்டம். இதிலும் இந்தியாவையும் எமக்கெதிரான சதிகாரக் கும்பலையும் வெல்லவிட்டோமானால் எமது கதி அதோகதிதான்.
இந்தச் சம்பந்தரைத்தான் திருகோணமலையில் வெல்லவைக்க எமது புலத்து ஊடகவியலாளர், எழுத்தாளர், ஆய்வாளர் எனப் பலர் முயன்றுகொண்டிருக்கின்றனர். இதற்கு அவர்கள் வைக்கும் ஒரே சாக்குப்போக்கு: திருமலையில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும். தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டுமென்ற காரணத்தால் மிகப்பிழையான, மிகவும் ஆபத்தான ஒருவரை நாடாளுமன்றம் அனுப்ப முடியுமா என்ன? அவரைத் தோற்கடித்து வேறொருவரை நாடாளுமன்றம் அனுப்புவதைப் பற்றி ஏன் யோசிக்க மறுக்கிறார்கள்? எல்லோரும் திரண்டுநின்று காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் நிற்கும் அணியை ஆதரிப்பதன் மூலம் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும் காபாற்றியதாகிறது; அத்தோடு தவறான ஒருவரைத் தோற்கடித்ததும் ஆகிறது.
இதுவொன்றும் சாத்தியப்படாத விடயமன்று. ஏதோ சம்பந்தர் அசைக்க முடியாத சக்தியாகத் திருமலையில் திகழ்கிறார் என்று கருதிக்கொண்டு யாராவது பேசுவார்களாக இருந்தால் அவர்கள் அங்குள்ள நிலைமை தெரியாமல் கதைப்பவர்களாகவே இருப்பர். சம்பந்தருக்குப் பின்னால் இருக்கும் பலமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு மாயையும் வீட்டுச் சின்னமும் தான். இதைச் சரியான முறையில் எதிர்கொண்டு அந்த மாயையைத் தகர்க்க முடியும். திருகோணமலையின் நகர்ப்புறத்தைத் தாண்டிப்பார்த்தால் சம்பந்தனுக்கு மிகப்பெரும் எதிர்ப்பலையொன்று ஏற்கனவே இருக்கிறது. மேலும் கெளரிமுகுந்தன், கண்மணி அம்மா போன்றவர்களுக்கு இருக்கும் செல்வாக்கும், ஆதரவும் அதிகமேதான். நாடாளுமன்ற உறுப்பினராயிருந்த சம்பந்தனைவிடவும் மக்களோடு நேரிலே களத்திலே நின்று பணியாற்றிய கெளரிமுகுந்தன், கண்மணி அம்மா குழுவுக்கு கீழ்த்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிக ஆதரவு உள்ளதென்பதே கள யாதார்த்தம். மிகக் கடுமையான போட்டியை சம்பந்தன் அணிக்கு அங்கே சைக்கிள் சின்னக்காரர் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால்தான் தொடக்கத்திலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் கெளரிமுகுந்தன் பற்றிய அவதூறுப் பிரச்சாரத்தைத் தொடங்கியிருந்தார். ஊடக, பண பலமின்றி களத்திலிறங்கி வேலைசெய்யும் கஜேந்திரகுமார் அணியைப் பலப்படுத்தி சரியான ஒருவரை நாடாளுமன்றம் அனுப்புவதே நாம் செய்ய வேண்டிய பணி. அஃதன்றி, சம்பந்தர் புராணம் பாடிக்கொண்டிருப்பது தவறு; அதற்கு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும், பிரதேசவாதத்தையும் (கிழக்கான் தலைமை தாங்குவதை வடக்கான் விரும்பவில்லை என்பது) துணைக்கழைப்பது மகாதவறு.
எனவே திருமலையிலிருந்து நாடாளுமன்றம் செல்லப்போகும் அந்தத் தமிழ்மகனை/மகளை சரியான பக்கத்திலிருந்து தெரிவு செய்து அனுப்ப வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. அதையுணர்ந்து அனைவரும் ஒன்றாக அணிதிரள்வதே சிறப்பு.
Sunday, March 14, 2010
SMS அணியைத் தோற்கடிப்போம்
அன்புள்ள தமிழ் வாசகப் பெருமக்களே!
இலங்கைத் தீவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாள் குறிக்கப்பட்டு வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மக்களின் வாக்குகளை வேட்டையாடுவதிலும் விலைக்கு வாங்குவதிலும் அரசியற் கட்சிகளும் தனிநபர்களும் மும்முரமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழரின் பூர்வீகத் தாயகத்திலேயும் இத்தேர்தல் நடவடிக்கைகள் களைகட்டியுள்ளன.
இம்முறை தாயத்துத் தமிழர்களுக்கு மிகவும் குழப்பகரமான தேர்தலாக இது அமையப் போகிறது. இதுவரை, தட்டிக் கேட்கவென ஒரு கட்டமைப்பு இருந்தது. ஒருகட்டத்தில் வாக்கு அரசியலையும் அது தனது ஆளுமைக்குள் கொண்டுவந்து வழிகாட்டியது. அவர்கள் கைகாட்டிய திசையில் மக்களும் பயணித்தார்கள். இப்போது அந்தச் சக்தி அழிக்கப்பட்ட, அல்லது உடனடியாக மீண்டெழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில் மீண்டும் தாயக அரசியல் என்பது பழைய நிலைமைக்குத் திரும்பியுள்ளது.
யார் சரியானவர்கள்? யாரை எமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்ற கேள்விகளுக்குச் சரியான விடை தற்போது தாயக மக்களின் மனங்களிலில்லை. இந்நிலையில் விடுதலைப் புலிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டு மக்களுக்குக் காண்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதிலிருந்து பிரிந்து சென்று தனியான ஓரணியை அமைத்துப் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியும் மக்களின் கவனத்துக்குரிய சக்திகளாகத் திகழ்கின்றன. புலிகளால் மக்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டதைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, அந்தப் பரிந்துரையை முதன்மையாகக் கொண்டு வாக்குகளை அள்ளும் ஒரு நடவடிக்கையிலும் த.தே.கூ இறங்கியுள்ளது. அது தனக்கான வேட்பாளர்களைத் திரட்டியபோது யார்யாரிடம் எப்படியெப்படிக் கதைக்க வேண்டுமோ அப்படியப்படி கதைத்துக் கொண்டது. தீவிர தேசியவாதிகளிடமும் புலிகளின் ஆதரவாளர்களிடமும் கதைக்கும்போது தாம்தானே புலிகளால் வளர்க்கப்பட்ட சக்தி, எனவே எமக்குத்தானே உங்கள் ஆதரவு வரவேண்டும்? தொனியில் கதைப்பது தொடக்கம், புலத்திலே புலியைக் காட்டி தங்கள் ஆதரவு நிலையைத் தக்க வைப்பதும் இதற்கு உதாரணம்.
இதைவிட மக்கள் மனத்திலும் த.தே.கூ என்ற அந்த மாபெரும் சக்தி ஒரு மாயையாகப் பதிந்துள்ளது. ஏற்கனவே சில ஆண்டுகளாக அக்கூட்டமைப்புப் பற்றி ஏற்படுத்தப்பட்ட விம்பமும், பரப்புரையும் அவ்வளவு எளிதில் மக்களிடமிருந்து அகன்றுவிட முடியாது என்பது உண்மையும்கூட. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு த.தே.கூ இன் தலைமை தனது வெற்றியில் உறுதியாக இருப்பதுடன் தான்தோன்றித்தனமாக பல காரியங்களைச் செய்துகொண்டு வருகிறது. அதன் பின்னணியில் ஏராளமான விடயங்கள் நடந்து முடிந்துவிட்டன.
இன்றைய நிலையில் இந்த விம்பத்தை உடைத்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டிய தேவையுள்ளது. சம்பந்தர், மாவை, சுரேஸ் பிரேமச்சந்திரன் (SMS) ஆகியோரைக் கொண்ட அந்தக் கூட்டுத்தலைமை (இந்தக் கூட்டுத் தலைமையென்பது புலிகளாலோ மக்களாலோ ஏற்படுத்தப்பட்டதன்று; நாசகாரச் சக்திகள் தாமாகவே கைகோர்த்துக் கொண்டன.) எவ்வாறு தமிழரின் அரசியற் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முனைப்போடு செயற்படுகின்றது என்பதை வெளிக்கொணர வேண்டிய தேவை காலத்தின் கட்டாயமாகியுள்ளது. இதைப்பற்றி மிகச்சிலரே ஆக்கபூர்வமான கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். பலர், இந்தத் தலைமை பிழையானதெனத் தெரிந்தும், ‘வேறு வழியில்லை, இவர்களை வைத்துக்கொண்டு ஏதாவது செய்ய வேண்டும்’ என்ற நிலைப்பாட்டுடனோ, காலகாலமாக போதிக்கப்பட்டு வந்த ஒற்றுமைப் பூச்சாண்டிக் காரணங்காட்டியோ, முன்பே சொன்னதுபோல் இதுவரை போராட்டத்தைத் தலைமைதாங்கி வந்த சக்தியால் கைகாட்டப்பட்ட கட்டமைப்பு என்ற காரணத்தாலோ த.தே.கூட்டமைப்பை, அதன் தலைமையை விமர்சிக்கத் தயங்கிக் கொண்டுள்ளார்கள். இன்னும் சிலர் குருட்டுத்தனமான தனிப்பட்ட பக்தியால் SMS அணியினரின் பாதங்கழுவிக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த SMS அணியினரைத் தோற்கடிக்க வேண்டிய தேவைபற்றிய ஆழமான, தாக்கமான கட்டுரைகள் அதிகம் எழுதப்பட்டல் வேண்டும். ஒற்றுமை என்ற பூச்சாண்டியைக் காட்டிக்கொண்டு SMS அணியைத் தாங்கிப் பிடிப்பவர்கள் உண்மையை உணர்ந்து வெளிவர வேண்டும். குருட்டுத்தனமாக SMS அணிக்காகப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் செய்தித் தளங்கள் தமது நிலையை மாற்றி தமிழ்த் தேசியத்துக்கு உண்மையான பணியை ஆற்றவேண்டும். குறைந்தபட்சம் இந்த இணையத்தளங்கள் தமது தேசியப் பம்மாத்திலிருந்தாவது தம்மைக் கழற்றிக் கொண்டுவிட வேண்டும்.
SMS அணியைத் தோற்கடிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் இந்த வலைத்தளம், அந்நோக்கத்தை நிறைவேற்ற தன்னாலான சகல வழிகளிலும் முயற்சிக்கும். இந்த நோக்கில் தமது எண்ணங்களைப் பகிர நினைத்தும் களம் கிடைக்காமல் காத்திருக்கும் எழுத்தாளர்களுக்கு இது நிச்சயம் களம் அமைத்துக் கொண்டும்.
வாசகப் பெருமக்களின் ஆதரவோடு இந்தப் பரப்புரை முன்னெடுக்கப்படும். SMS அணியின் அராஜகங்கள், அவர்கள் ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்கான வலுவான பரப்புரையை இத்தளம் முன்னெடுக்கும். தமிழர் தாயகத்தில் உண்மையான, நேர்மையான அரசியற் சக்தியை உருவாக்க உருவாக்க நினைக்கும் எவருமே எம்மோடு இணைந்து பயணிக்கலாம்.
தொடர்ந்தும் படைப்புக்களில் சந்திப்போம்.
நன்றி.
-நிர்வாகம்